Trisha’s Mohini Movie Review

Spread the love

ன்னைக் கொன்றவர்களைப் பழிவாங்கும் வழக்கமான அதே பேய் கதைதான், த்ரிஷாவின் ‘மோகினி’யும்!

சென்னையில் கேக் ஷாப் வைத்திருக்கிறார், த்ரிஷா. தன் தோழியின் திருமணம் நடக்கவேண்டுமெனில், யோகிபாபுவுடன் அவர் லண்டனுக்குச் செல்லவேண்டும் என்ற நிலை. த்ரிஷா, யோகி பாபு, சாமிநாதன் மூவரும் லண்டனுக்குக் கிளம்ப, அங்கே ஓர் அமானுஷ்யம் அத்தனை பேரையும் துரத்துகிறது, இந்தத் துரத்தலில் த்ரிஷாவுக்குக் கூடுதல் அதிர்ச்சி. துரத்தும் பேய்க்கும், அவருக்கும் என்ன தொடர்பு, அதிலிருந்து த்ரிஷா மீண்டாரா, ஆவியின் ஆசை நிறைவேறியதா… இப்படிப் பல கேள்விகளுக்கான பதிலே இந்த ‘மோகினி’.

வழக்கமான பேய் கதையை வழக்கத்திற்கு மாறாகச் சொல்வதில்தான் அடங்கியிருக்கிறது பேய் படங்களின் வெற்றி. ஆனால், ‘மோகினி’யில் அது மொத்தமாக மிஸ்ஸிங்! பேய், மாந்திரீகம், காமெடி, காதல்… எனத் தாறுமாறாகத் திரைக்கதை அமைத்து, காதில் பூ சுற்றுகிறார், இயக்குநர் ஆர்.மாதேஷ். ஏன் இந்தக் கொலவெறி?!

தோழியின் திருமணம், ஆவியின் பழிவாங்கல், அதற்கான ஃபிளாஷ்பேக் என பிரேக் பிடிக்காமல் நகரும் கதையில், ஒரே நம்பிக்கை ‘வைஷ்ணவி / மோகினி’யாக வரும் த்ரிஷா. காதல், திகில், ஆக்‌ஷன்… என அத்தனை ஏரியாவிலும் தன் பெஸ்டை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். திரைக்கதை த்ரிஷாவுக்குத் தீனி போட்டிருந்தால், நடிப்பில் தனித்துத் தெரிந்திருப்பார். மத்தபடி, ‘கேக்’ ஸ்பெஷலிஸ்ட் த்ரிஷாவுக்கு மட்டும் ஆயிரம் லைக்ஸ்!

 

யோகி பாபு பேசினாலே ஆடியன்ஸ் சிரிப்பார்கள் என இயக்குநர் நினைத்துவிட்டாரோ என்னவோ, நொடிக்கு ஒருமுறை வசனம் பேசி, சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார். சில வசனங்களைத் தவிர, மற்றவையெல்லாம் ஏமாற்றம்தான். த்ரிஷா, யோகி பாபு, சாமிநாதன் கூட்டணிக்கு அடைக்கலம் தரும் லண்டன்வாசிகள் மதுமிதா – கணேஷ்கரின் ஓவர் ஆக்டிங் முடியல! த்ரிஷாவுடன் காதல் கொள்ளும் பாலிவுட் நடிகர் ஜாக்கிக்கு இது தமிழில் முதல் படம். கொஞ்சம் காட்சிகள், இரண்டு பாடல்கள் என வந்து போகிறார், அவ்வளவுதான்.

படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள்! பேய் படம்னாலும் இப்படியா பாஸ்? ஆற்றில் விழுந்த பிரேஸ்லெட்டை படகில் இருந்தபடியே எடுத்துக்கொடுக்கிறார் த்ரிஷா. மந்திரிக்கப்பட்ட கயிறு கட்டியிருப்பவர்களை அடித்தே அவிழ்க்கச் சொல்கிறது, அந்தப் பேய் (பேய் அண்டாதுனுதானே பாஸ், அந்தக் கயிறையே கட்டச்சொன்னீங்க!), இன்டர்வெல் வரை வந்த வேலையை முடிக்காமல் அத்தனை கேரக்டர்களையும் அலறவிடுவது.. எனப் ‘பேய்த்தன’ லாஜிக்குகள் ‘நியாயமாரே…’! தவிர, பேய் வரும்போதெல்லாம், ‘அட நீ வேற… இரும்ம்மா!’ என்று நினைக்கும் அளவுக்கு பேயை ‘செட் பிராப்பர்டி’யாக மட்டும்தான் டீல் செய்திருக்கிறார்கள்.

லண்டனில் படமாக்கியிருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்காககோ என்னவோ, அடிக்கடி டாப் ஆங்கிளில் லண்டனைச் சுற்றுகிறது, குருதேவ்வின் கேமரா. பேய் படத்திற்குப் பின்னணி இசை எவ்வளவு முக்கியம், ஆனால் கத்தல், கதறல் மட்டும்தான் இதில் பின்னணி இசை. தவிர, பாடல்களும் சுமார் ரகம்தான். எடிட்டரும் ‘உள்ளேன் ஐயா!’ சொல்லிக் கிளம்புகிறார்.

கதையில் நரபலி தொடர்பான விஷயத்தை முன்னிலைப்படுத்தியிருக்கும் இயக்குநர், அதற்கான தேடலுக்கு இன்னும் அதிகம் மெனக்கெட்டு இருக்கலாம். அதேபோல வழக்கமான பேய் பட க்ளிஷேக்களைத் தவிர்த்து திரைக்கதை அமைத்திருந்தால், இந்த ‘மோகினி’யின் ஆட்டம் வேற லெவலில் இருந்திருக்கும். அதனாலேயே வழக்கமான பேய் படமாகக்கூட இல்லாமல் கடந்துபோகிறாள், இந்த மோகினி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *