‘இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி – இயக்குனர் கோகுல் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் தான் இந்த ‘ஜுங்கா’.
ஹீரோ டான் என்றாலே அந்தப்படம் கண்டிப்பாக ‘டார்க் காமெடி’ வகையாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. அந்த வகையில் இந்தப் படத்தில் ஹீரோ விஜய் சேதுபதியும் ஒரு டான் தான். ஆனால் கடும் கஞ்ச டான்.
ஏற்கனவே டான் ஆக ஆசைப்பட்டு தாத்தா லிங்காவும், அப்பா ரங்காவும் சம்பாதித்த சொத்துக்கள் எல்லாவற்றையும் அழித்தவர்கள்.
ஆனால் தாத்தாவும், அப்பாவும் சொத்துக்களை அழித்த விஷயம் மகன் விஜய் சேதுபதிக்கு தெரியக்கூடாது தெரிந்தால் அவனும் அப்படியே வளர்வான் என்று பயந்து அந்த விஷயத்தை சொல்லாமல் வளர்க்கிறார் அம்மா சரண்யா பொன்வண்ணன்.
ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் அந்த ரகசியத்தை சரண்யாவே விஜய் சேதுபதியிடம் சொல்ல நேர்கிறது.
குறிப்பாக தங்களது முக்கிய சொத்தான ‘சினிமா பேரடைஸ்’ என்ற தியேட்டரை வில்லன் சுரேஷ் மேனனிடம் இழந்த விஷயத்தை சொல்கிறார். அதைக் கேட்கும் விஜய் சேதுபதி தாத்தாவும், அப்பாவும் தோற்ற டான் தொழிலில் ஜெயித்துக் காட்டுவேன் என்று சபதம் போட்டு டான் ஆக மாறி தாத்தாவும், அப்பாவும் இழந்த அந்த தியேட்டரை மீட்க முடிவு செய்கிறார். போட்ட சபதத்தில் விஜய் சேதுபதி ஜெயித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
ஒரே மாதிரியாக நடித்து எரிச்சலூட்டுகிறார் என்கிற ரசிகர்களின் தொடர் குற்றச்சாட்டுக்கு இந்தப் படத்தில் பலவித கேரக்டர்களில் விதவிதமாக கெட்டப்புகளில் வித்தியாசம் காட்டி காமெடியிலும் கலக்கியிருக்கிறார் விஜய் சேதுபதி.
பூர்வீக சொத்தான தியேட்டரை மீட்க கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்க்கும் விஜய் சேதுபதி அதற்காக யோகிபாபு உள்ளிட்ட அடியாட்களிடம் படு கஞ்சத்தனத்தோடு நடந்து கொள்ளும் காட்சிகள் காமெடிக்கு கியாரண்டி.
அதிலும் பல லட்சம் செலவு செய்து வெளிநாட்டுக்கு சென்ற பிறகும் இலவசமாகக் கிடைத்த ரொட்டி பாக்கெட்டுகளை உணவாக வைத்திருப்பதெல்லாம் கஞ்சத்தனத்தின் உச்சம் மட்டுமல்ல, காமெடியின் உச்சமும் கூட!
விஜய் சேதுபதி கூடவே வரும் யோகிபாபு காமெடியில் ரசிகர்களுக்கு நல்ல விருந்தளிக்கிறார். விஜய் சேதுபதியின் ஒவ்வொரு கஞ்சத்தனத்தையும் பார்த்து மிரளுகிற காட்சிகளில் தியேட்டரே ‘கொள்’ எனச் சிரிக்கிறது!
சாக்லேட் பேபி போல வரும் நாயகி சாயிஷா பாடல் காட்சிகளிலும், நடன அசைவுகளில் அழகோவியமாக ஜொலிக்கிறார். நடிப்பிலும் குறையில்லை. இன்னொரு நாயகியாக சில காட்சிகளே வந்தாலும் தன்னை திருமணம் செய்ய விஜய் சேதுபதியிடம் கண்டிஷன்களை அடுக்குகிற இடத்தில் கவனம் ஈர்க்கிறார் மடோனா செபாஸ்டியன்.
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் வந்ததைப் போல ஒரு டம்மியான வில்லனாக வருகிறார் சுரேஷ் மேனன்.
சென்னை லோக்கல் பாஷையில் சரண்யா பொன்வண்ணன் கனகச்சிதம் காட்ட, பணபலம், அதிகாரபலம் உள்ள சுரேஷ்மேனனை பஞ்ச் மேல பஞ்ச் பேசி, கெத்து காட்டுகிற இடத்தில் கைத்தட்டல்களை அள்ளுகிறார் விஜயா பாட்டி!
சித்தார்த் விபினின் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை என்றாலும் டான் படத்துக்குரிய பின்னணி இசையை நேர்த்தியாகக் கொடுத்திருக்கிறார்.
டூட்லியின் ஒளிப்பதிவில் பாரீஸ் நகரின் இண்டு இடுக்கு மூலைகளில் அழகையும் குறையில்லாமல் ரசிக்கலாம்.
சில காட்சிகளே வந்தாலும் அனுபவ நடிப்பில் நிறைவைத் தருகிறார் ராதாரவி.
மால் தியேட்டர்களில் பாப்கார்ன் கொள்ளை, சூர்யா, தனுஷ் பாடல் எழுதுவதையும் போகிற போக்கில் கலாய்த்திருக்கிறார்கள்.
முதல் பாதியில் இருந்த வேகம் இடைவேளைக்குப் பிறகு கதைக்களம் வெளிநாட்டுக்கு ஷுப்ட் ஆனதும் விறுவிறுப்பு குறைய ஆரம்பித்து விடுகிறது. படத்தின் மிதமிஞ்சிய நீளமும் கொஞ்சம் சோர்வைத் தருகிறது.
சாயிஷா வெளிநாட்டுக்கு ஏன் சென்றார்? அவ்வளவு பெரிய கோடீஸ்வரரின் மகளான அவர் ஏன் ஹோட்டலில் தங்குகிறார்?
கடும் கஞ்சத்தனம் காட்டுகிற டான் விஜய் சேதுபதி வெளிநாட்டுக்கு போக எவ்வளவு செலவாகும் என்கிற அடிப்படை விஷயம் கூடவா தெரியாமல் இருப்பார்? போன்ற லாஜிக் மிஸ்டேக்ஸ்சும் படத்தில் உண்டு.
‘டார்க் காமெடி’ என்ற பெயரில் கடுப்பேற்றும் சில படங்களுக்கு மத்தியில் அதே லேபிளுடன் வந்திருக்கும் இந்தப் படத்தில் அந்தக் கடுப்பே வர விடாமல் நிறைவாகவே சிரிக்க வைக்கிறார் இயக்குனர் கோகுல்.